×

வத்தலக்குண்டு அருகே பள்ளி கட்டிடம் கட்ட ரூ.1.84 கோடி ஒதுக்கீடு

வத்தலக்குண்டு, ஜூன் 18: வத்தலக்குண்டு அருகே விராலிபட்டியில், பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.1.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உருவானது. கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி அதனை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த உதவினார். அப்போது, 34 சென்ட் நிலத்தில் செயல்படும் ஆரம்பப் பள்ளியை உயர்நிலைப் பள்ளிக்கான கட்டிடங்கள் உருவாக்க முடியாது என்பதால், கிராம மக்கள் இணைந்து ஊருக்கு அருகே 2 ஏக்கர் 74 சென்ட் இடம் வாங்கினர். ஆனால் அந்த நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்தார். இதனால் குறுகிய இடத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்து ஆண்டுகளாக படித்து அவதியடைந்து வந்தனர்.

கொரோனா காலங்களில் மரத்தடியில் மாணவர்களுக்கான வகுப்புகள் நடந்தது. இதையடுத்து திமுக ஒன்றிய செயலாளர் முருகன் ,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், விராலிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன்ஆகியோர் அமைச்சர் ஐ.பெரியசாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து தங்கள் பிரச்னை குறித்து விளக்கிக்கூறினர். மேலும் கிராமசபை கூ்டத்திற்கு வந்த மாணவர்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுகுறித்து விரிவான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஒரு கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இதற்கு உறுதுணையாக இருந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி மற்றும் அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post வத்தலக்குண்டு அருகே பள்ளி கட்டிடம் கட்ட ரூ.1.84 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Vathalakundu ,Vatthalakundu ,Tamil Nadu government ,Viralipatti ,
× RELATED வத்தலக்குண்டு ஜி.தும்மலப்பட்டியில்...